கன்னியா_மலையில்_காணப்படும் #இராவணனின்_தாயின்_சமாதி அது தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்

 #கன்னியா_மலையில்_காணப்படும்  #இராவணனின்_தாயின்_சமாதி

அது  தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்



திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.
இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக  கூறப்பட்டு வருகிறது.



 கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த  சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா? என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.



அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன்.  2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.

இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.



இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும்  என்பதே. 
 
கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு  பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது.  கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும். 

கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.

கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு  நீளமாக ஏன் இருக்க வேண்டும்? 

அதற்கும் ஓர் காரணம் உள்ளது.
கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம்  வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.

இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?
 
அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும்  எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.

இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
 
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.

ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 “On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”

இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.

இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள்  60 அடி சமாதி எனப் பெயரிட்டு,  இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.

சைமன் காசிச்செட்டியின் குறிப்பு

மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.
    
சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு

இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.37

மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு

கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும்  “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது  இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின்  பின்பகுதி கீழ்வருமாறு.

“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.
 
மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும். 

இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து  திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார். 

எனவே “Tombs of a Giant and his Son”  என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.  

1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி

கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி  இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.
 
இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது. 
  
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர் 
இலங்கை


5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial