பாலு மகேந்திரா - வாழ்க்கை வரலாறு...!
பிறப்பு: பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்
மே 20, 1939 (அகவை 74)
மட்டக்களப்பு, இலங்கை
இறப்பு:பெப்ரவரி 13, 2014
சென்னை, இந்தியா
இருப்பிடம்:சென்னை, இந்தியா
பணி:திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர்.
பாலு மகேந்திரா(Balu mahendra) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், கன்னட, மலையாள மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
பிறப்பு
1946 மே 19 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது அண்டை வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன்.
அழியாத கோலங்கள் திரைப்படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் தான் என பாலு மகேந்திரா நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
திரைப்பட நுழைவு
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார்.
இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார்.
பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தேசிய விருதுகள்
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் அவரே.
இயக்குனரான உதவியாளர்கள்
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர்.
பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
இயக்கிய திரைப்படங்கள்
கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
ஓலங்கள் (மலையாளம்)
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதி லீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
துணுக்குகள்
பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
இவர் பூனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார்.சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.
தனது 74ஆவது வயதில் திரையுலகையும் இவ்வுலகையும் விட்டு பிரிந்த பாலு மகேந்திரா தமிழ் திரையுலகின் வரலாற்றில் அழியாத இடத்தில் பொறிக்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.