பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான்தான்; சொல்கிறார் ஆதவ் அர்ஜூனா!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, 2021 சட்டசபை தேர்தலின்போது, பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது நான் தான் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு விரைவில் ஒரு இயக்கமாக வீரநடை போட உள்ளது என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் புத்தக வெளியீடு மற்றும் அந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேச்சு, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையே உரசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாத சூழலில், கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, நீண்ட விளக்கம் ஒன்றை ஆதவ் அர்ஜூனா தமது வலைதள பதிவில் வெளியிட்டு இருந்தார். இன்றும் அவரது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த பதிவில் நான்கரை நிமிடம் ஓடக்கூடிய வீடியோ தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் தமது வாழ்க்கை முறை, கல்வி, கடந்த கால நடவடிக்கைகள், தமது நோக்கம், தனது அமைப்பின் செயல்பாடுகள் என்னவாக இருக்கிறது, பணிகள் என்ன என்பதை குறிப்பிட்டு உள்ளார்.
வீடியோவில் தான் நடத்தி வரும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து இருக்கிறார். அதில் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோருடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்களையும் பகிர்ந்து உள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வேலை பார்ப்பதற்காக, ஐ-பேக் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே ஆதவ் அர்ஜூனா தான் என்றும், தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றியது அவர் தான் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பு, தேர்தல் அரசியலை வென்றெடுக்க ஒரு இயக்கமாக வீரநடை போடும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment