வாழு வாழ விடு! தனுஷை விமர்சித்து போட்ட போஸ்ட்டை
கடகடனு நீக்கிய விக்னேஷ் சிவன்! ஏன் என்னாச்சு?
சென்னை: யாருக்கும் யார் நல்லா இருந்தாலும் பிடிக்கவில்லை, வாழு வாழ விடுனு தனுஷ் பேசிய வீடியோவை போல் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் விக்னேஷ் சிவன். இவர் ஆடியோ லாஞ்ச்களில் பேசியதை நம்பும் சில தீவிர தனுஷ் ரசிகர்கள், அவருடைய உண்மையான முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென தான் போட்ட இன்ஸ்டா போஸ்ட்டை விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண டாக்குமென்டரி படத்தில் தயாரிப்பாளர் தனுஷுன் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் நிலையில் அதற்கான டிரெய்லர் வெளியானது
அதில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் பேசிக் கொண்டிருந்த 3 வினாடி வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறி நயன்தாராவுக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கும் நடிகர் தனுஷ் ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு நடிகை நயன்தாரா காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நானும் ரவுடிதான் படக் காட்சியை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். ஆனாலும் எங்களது ஆவணப் படத்தை வெளியிட தனுஷ் முட்டுக்கட்டையாக இருந்தார். அவர் அவருடைய தந்தையின் ஆசியிலும் சகோதரரின் ஆதரவிலும் நடிகராகிவிட்டார். ஆனால் நான் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். தனுஷின் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இல்லாமலேயே இந்த ஆவணப்படத்தை வெளியிடுவோம். இந்த படத்தை நீங்களும் பாருங்கள். உங்கள் மனம் நிச்சயம் மாறும். பொதுவெளியில் உயர்ந்தவராக காட்டிக் கொள்ளும் நீங்கள் நிஜ வாழ்விலும் அதில் பாதியளவாவது இருங்கள் என்றும் மிகவும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எங்கள் மீது வெறுப்பை கக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் அனுப்பிய வக்கீல் நோட்டீஸை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் கூறிய வார்த்தைகளை தனுஷுக்கே கூறுவது போல் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோவில் தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்ததாவது ஒருத்தர் மேல இருக்கும் அன்பு இன்னொருத்தர் மேல் வெறுப்பாக மாறும். அப்படி மாறினால் அதற்கு அர்த்தமே இல்லை. உலகம் இன்று மோசமான நிலைமையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அத்தனை எதிர்மறையான எண்ணங்கள். யாருக்குமே யார் நல்லா இருந்தாலும் பிடிக்கவில்லை. நீங்கள் வாழுங்கள், வாழ விடுங்கள், சிம்பிள்! யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எதற்காக வெறுக்க வேண்டும். ஒருத்தரை பிடித்திருந்தால் கொண்டாடுங்கள். பிடிக்கலை என்றால் தள்ளி போய்விடுங்கள். அவ்வளவுதான். பெரிய ராஜதந்திரம் எல்லாம் கிடையாது என தனுஷ் பேசும் வீடியோவை தனது பதிவில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.மேலும் அவர் கூறிய வாழு வாழ விடு என்ற தத்துவத்தை கூறி நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் 3 வினாடி காட்சிக்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் அனுப்பிய வக்கீல் நோட்டீஸையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட்டுக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியதாலோ என்னமோ தெரியவில்லை, விக்னேஷ் சிவன் வக்கீல் நோட்டீஸையும் அந்த வீடியோவையும் நீக்கியுள்ளார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.