ஷூட்டிங் செட்டிலிருந்து ஓடி போன நடிகர் பிரகாஷ் ராஜால் ரூ 1 கோடி நஷ்டம்! தயாரிப்பாளர் கடும் விமர்சனம்
சென்னை: என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் சென்றதால் ரூ 1 கோடி நஷ்டம் ஆகிவிட்டது. நீங்கள் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தவர் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜை, தயாரிப்பாளர் வினோத் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று திமுக எம்பி திருச்சி சிவா எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி ஆர் பாலு மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்
விழாவில் திருச்சி சிவா எழுதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதனை டி ஆர் பாலு பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் எடுத்த ஒரு புகைப்படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அதில் துணை முதல்வருடன் என கேப்ஷன் போட்டுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் வினோத் குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரகாஷ் ராஜ் அவர்களே உங்களுக்கு உட்கார்ந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பி திருச்சி சிவா ஆகியோர் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்.
ஆனால் நீங்கள் பெங்களூரில் லோக்சபா தேர்தலில் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துவிட்டீர்கள். இதுதான் உங்களுக்கும் அவர்களுக்குமான வித்தியாசம். என்னுடைய திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது கேரவனில் இருந்த நீங்கள் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டீர்கள்.
உங்களால் எனக்கு 1 கோடி ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது. என்ன காரணத்திற்காக படப்பிடிப்பில் இருந்து சொல்லிக்காமல் சென்றீர்கள். எனக்கு நீங்கள் போன் செய்வதாக சொன்னீர்கள். ஆனால் இதுவரை எனக்கு போன் செய்யவில்லை என வினோத்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
வினோத்குமார் தயாரிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு எனிமி என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். இவர் விஷால், எஸ்ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பிரகாஷ் ராஜ் எந்த படத்திலிருந்து சொல்லிக்காமல் போனார் என்பது குறித்து தெரியவில்லை. வினோத் குமாருக்கு பிரகாஷ் ராஜ் எந்த பதிலையும் இதுவரை சொல்லவில்லை.