கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்குப் பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்குகுறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கைச் சீர் செய்ய, இனியும் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்கப் போகிறீர்கள்? ஹிர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்குப் பழிவாங்கவே இதைச் செய்திருப்பதாகக் காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைத் திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்குக் காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பதேன்?
3. சமீப காலமாகத் தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிகச் சுலபமாகக் கொல்லக்கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால். தமிழ்நாட்டில் உள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும்போது அச்சம் ஏற்படுகிறது. இந்தப் பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது எனத் திட்டமிட்டே தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து. அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்தப் பகுதி அடங்காது என்று. அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சசு செயலைச் செய்து இருக்கிறது இந்த அரசு உண்மையிலேயே உங்களுக்குத் தலித் மக்கள்மீதும், தலித் தலைவர்கள்மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது. தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்தக் கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணளின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!, 'அவரே ஒரு ரவுடி', 'ஒரு ரவுடியைக் கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்க முடியும்', 'கட்டப்பஞ்சாயத்து செய்பவர்', 'பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்' என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம்
லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில்
பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக்
கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போலக்
கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்தபிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும்
எந்நாளும் அக்கறை கொண்டு என்னைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித
சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான்
கருதுகிறேன். இதைச் சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை) வழிநடத்தும்.
ஜெய்பீம்!
Post a Comment