குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் நடைபெற்றது.
படத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசும்போது,
"ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர் தான் வாங்குகிறார்.
இயக்குநர் செல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும்.
இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.
கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டிட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம், நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார்.
அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் .
அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது.
பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் "என்றார்.
Post a Comment