இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டதோடு, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாட்டுத் தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துக் கவனம் செலுத்தியதோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்டுக் மாநாட்டில் பங்குபற்றியதிலிருந்து காணப்படும் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை நினைவுகூர்ந்து தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இவ்வாறான மாநாடுகளின்
முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இந்தோனேசிய ஜனாதிபதி விடோடோவின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி நன்றி கூறினார்.
உலக நீர் உச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீர் வள முகாமைத்துவத்தில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான நிதிச் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் உலகளாவிய கூட்டு நிதியத்தில் பங்கேற்க இலங்கை ஆர்வமாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.
கூட்டுச் செயலகம் ஒன்றை ஆரம்பித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசியாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், இலங்கைக்கான அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
Post a Comment