சினிமாவில் அவுட்- திமுகவில் சேர துடித்த ஜெயலலிதா.. எம்.ஜி.ஆரிடம் போராடி தடுத்த ஆர்.எம்.வீரப்பன்!
1970களில் சினிமாவில் ஜொலிக்க முடியாத தருணத்தில் திமுகவில் எம்ஜிஆர் மூலமாக இணைந்து அரசியலில் குதிக்க முடிவு செய்தார் ஜெயலலிதா; ஆனால் எம்ஜிஆருடன் போராடி திமுகவில் ஜெயலலிதா சேரவிடாமல் தடுத்தவர் இன்று மறைந்த ஆர்.எம்.வீரப்பன் என்பதுதான் சரித்திரம்.
எம்ஜிஆர் உருவாக்கிய திரைப்பட நிறுவனங்களின் மேலாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், அவரது மனசாட்சியாக இருந்தார். எம்ஜிஆர் சினிமாக்களின் நாயகிகளை தீர்மானிப்பவராகவும் ஆர்.எம்.வீரப்பன் இருந்தார்.ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் எதிர்ப்பாளராக இருந்தார்; எம்ஜிஆருடன் எப்போதும் சண்டை போடுபவராகவும் இருந்தார். இதனால்தான் தொடக்கம் முதலே ஜெயலலிதா-ஆர்.எம்.வீரப்பன் மோதல் இருந்து வந்தது.
1970களில் ஜெயலலிதா நடிக்காத எம்ஜிஆர் படங்கள் சக்கை போடு போட்டன. இதனால் புதுமுக நடிகைகள், எம்ஜிஆரின் நாயகிகளாகினர். ஜெயலலிதாவுக்கோ எந்த ஒரு திரைப்படமும் ஓடவில்லை; புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவில்லை. நான் ஆணையிட்டால் டூ பாட்ஷா வரை.. எம்ஜிஆரின் மனசாட்சி ஆர்எம்வீ, ஜெயலலிதா இடையே என்னதான் மோதல்? அதே காலகட்டத்தில் 1972-ல் மதுரையில் திமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலமாக திமுகவில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்பினார். எம்ஜிஆரும் மதுரை முத்து உள்ளிட்டோரிடம் ஜெயலலிதாவுக்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி இருந்தார். இதனால் கொந்தளித்துப் போனவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆர் பற்றிய மக்களிடையேயான புனிதமானவர் என்ற பிம்பத்தை உடைப்பவராக ஜெயலலிதாவை கருதினார் ஆர்.எம்.வீரப்பன். இதனால் எம்ஜிஆரிடம் ஜெயலலிதாவை மதுரை மாநாட்டுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என கடுமையாக போராடினார் ஆர்.எம்.வீரப்பன். தொடக்கத்தில் ஆர்.எம்.வீரப்பனின் இந்த கருத்துகளை எம்ஜிஆர் எதிர்த்தார். ஆனால் ஆர்.எம்.வீரப்பன் போராடித் தடுத்தார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரே மதுரை முத்துவுக்குப் போன் செய்து, ஜெயலலிதாவுக்கான ஏற்பாடுகள் வேண்டாம் என ஆணையிட்டும் விட்டார்.
இது தொடர்பாக எம்ஜிஆர் யார் என்ற நூலில் எழுதியிருக்கும் ஆர்.எம்.வீரப்பன், ஒரு மாபெரும் அபாயத்தை தடுத்து நிறுத்திவிட்டேன் என்ற மகிழ்ச்சியோடு பகல் உணவருந்தினேன். அப்படிப்பட்ட ஒரு அபாயம் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. 72-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா திமுக தொடங்கிய பிறகு இந்த அபாயம் (ஜெயலலிதா) முழுமையாகவே விலகிவிட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கழித்து அந்த அபாயம் எப்படியோ மீண்டும் எம்ஜிஆரை சூழ்ந்து கொண்டது என குறிப்பிட்டிருப்பார்.