முதல்வருக்கு ஒரு வலி மிகுந்த மடல்- வ.கௌதமன்

முதல்வருக்கு ஒரு வலி மிகுந்த மடல்.வரலாற்றை திரிக்க வேண்டாம். கலைஞர் கருணாநிதி பெயருக்கு பதிலாக மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பொருத்தமான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள்.
வ.கௌதமன்

ஏறுதழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டு மீட்புப் புரட்சியென்பது பெரும் தியாகம் சுமந்த இன்றைய இளைய தலைமுறையினருக்கும் ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் சொந்தமானது. வரலாற்றைத் திரிக்காமல் மதுரையில் திறக்க இருக்கின்ற ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை வைக்காமல், பொறுப்பான நல்ல தமிழ்ப் பெயரை சூட்ட வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

பீட்டா என்கிற பேரமைப்பின் சூழ்ட்சியால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினையடுத்து, ஆதிகால சங்கத் தமிழர்களின் ஏறுதழுவுதல் [ஜல்லிக்கட்டு] வீர விளையாட்டினை மத்திய அரசும் மாநில அரசும் தடை செய்தபோது, ராணுவமே வந்தாலும் இந்தாண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்காமல் ஓய மாட்டோம் என சபதமெடுத்து மதுரை அவனியாபுரம் வாடிவாசலில் போராட்டத்தை தொடங்கி ரத்தம் சிந்தி, அது பிரஞ்சு புரட்சிக்கு சமமான "தைப் புரட்சி"யாக மாறி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து போராடி அன்றிலிருந்து ஏழாம் நாள் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் மண்டிட வைத்து நாங்கள் பெற்றதுதான் ஏறுதழுவுதல் வீர விளையாட்டுக்கான உரிமை. 

சென்னை மெரினா உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், சிற்றூர்களிலும் அதற்கான புரட்சித் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையிலும் கரைவேட்டி கட்டியவர்களையோ கொடி கட்டிய வாகனத்தில் வந்தவர்களையோ எங்கள் இளைய தலைமுறையினர் போராட்ட களத்திற்குள் அனுமதியாமல், தமிழர்களாக நின்று போராடி வென்றதுதான் இதற்கான தனிப் பெரும் வரலாற்றுச் சிறப்பு. 

2016 ஜனவரி 14 மதுரை அவனியாபுரம் வாடிவாசலில் 200க்கும் மேற்பட்டோர் உறுதியோடும் உக்கிரத்தோடும் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். காவலர்களின் பெருங்கூட்டம் எங்களை எச்சரிக்கிறது. பிறகு அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. ரத்தம் சொட்டச் சொட்ட எதிர்த்து நின்று போராடுகிறோம். இறுதியில் எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைக்கிறார்கள். எண்ணற்ற தலைவர்கள் துக்கம் பகிர்கிறார்கள். விடுதலை செய்யப்பட்டு அன்று இரவு உடல் காயத்தோடும், மனக் காயங்களோடும் சென்னையை நோக்கி விரைவு ரயிலில் நான் வந்து கொண்டிருக்கும் போது இரவு 11 மணிக்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான தங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ஆறுதல் சொல்கிறீர்கள். இளைய தலைமுறையினர் தொடங்கிய போராட்டத்திற்கு வாழ்த்து சொன்னீர்கள், இதெல்லாம் மறக்க முடியாதது, நன்றிகள். உலகம் வியக்க வியக்க தொடர்ந்து ஏழு நாட்கள் நடந்த அந்த புனிதமிக்க போராட்டத்தை தகர்க்க இந்திய பாஜக அரசும், அப்போதைய திரு.ஓபிஎஸ் அவர்களின் தலைமையிலான அதிமுக அரசும் கைக்கோர்த்துக் கொண்டு எத்தனை எத்தனையோ சதித்திட்டங்களும் வியூகங்களும் எடுத்தும் நாங்கள் அத்தனையையும் தகர்த்தெறிந்து மெரினாவில் நிறைந்திருந்தோம். கவர்னர் உரைக்காக ஏழாம் நாள் அதிகாலை காவலர் படை ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என பார்க்காமல் எங்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது. மீண்டும் ரத்தச் சிதறல்கள். தெறித்தவர்கள் போக ஒரு பெரும் கூட்டம் கடலுக்குள் இறங்கினோம். உயிர் சேதம் ஏற்பட்டால் மீண்டும் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடுமோ என அரசும் காவல்துறையும் பதறி ஒரு வழியாக அன்று மாலை 4 மணிக்கு நான் உட்பட ஐந்து மாணவர்களோடு சபாநாயகர் திரு.தனபால் அவர்களின் அதிகார பூர்வ அழைப்பின் பேரில் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, எங்களுக்கு சட்டமன்ற மாடத்தில் இடம் ஒதுக்கி அமர வைத்து திரு.ஓபிஎஸ் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கச் சட்டத்தை முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவரான நீங்கள் வழிமொழிய சட்டம் இயற்றப்பட்டது என்பதனை தங்களும் அறிவீர்கள், தமிழுலகமும் அறியும். அப்பொழுது கூட கோட்டை வாசலில் வைத்து நாங்கள் போராட்டத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். பீட்டா அமைப்போ எங்கள் இன எதிரிகளோ இதன் பிறகும் எங்களிடம் வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கும் மாடாக மட்டும்தான் இருக்க முடியும். வேறு எவர் வாலாட்டினாலும் இழுத்து வைத்து ஒட்ட நறுக்கிடுவோம் என பிரகடனப்படுத்தி விட்டு வந்தோம். இப்படி ஏறுதழுவுதல் விளையாட்டு உரிமை மீட்பு ஒரு ரத்த கறைப் படிந்த வரலாறாக இருக்கின்ற பொழுது மதுரையில் புதிதாக கட்டித் திறக்கப்பட இருக்கின்ற ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு ஐயா கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரை வைப்பதென்பது நேர்மையற்றது என்பதையும் தாண்டி ஒரு அறமற்ற செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். 

எதிர்காலத்தில் எங்கள் வருங்கால இளைய தலைமுறையினர் ஏறுதழுவுதல் உரிமை மீட்புப் போராட்டத்தினை திமுகவே தனியாக நின்று நடத்தியது போலவும் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் மீட்டெடுத்து தந்தார்கள் எனவும் ஒரு தவறான வரலாற்றை படிக்க நேரிடும் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

அவனியாபுரத்தில் என்னைத் தாக்கி நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்று உரிமைக்குரல் எழுப்பிய போது அடைந்த வலியை விடவும் இப்பெயர் சூட்டும் நிகழ்வு எனக்கு பெருவலியை தருகிறது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறேன். எண்ணற்ற தமிழர் அமைப்புகளும் உலகம் முழுக்க வாழுகின்ற தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு மைதானம் கட்டிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் பலகையை அவசர அவசரமாக பொருத்தியது என்பது ஒருபோதும் ஏற்க முடியாது. 

என்னதான் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றது என்றாலும் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனையாகவும் இருக்கின்றது, அவர்களது பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகின்றது என்பதை சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மக்கள் எதிர்க்கின்ற எதையும் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக திணிக்கின்ற போக்கு எதிர்காலத்தில் நிலைக்கவே நிலைக்காது என்பதனை முதல்வர் அவர்கள் பெருந்தன்மையோடு உள்வாங்கி தாய்த் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு தமிழர் திருநாள் பரிசாக ஏறு தழுவுதல் வீரத்தமிழர் விளையாட்டரங்கம் என்றோ அல்லது பாண்டிய நெடுஞ்செழியன் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு அரங்கம் என்றோ பெயர் சூட்டி வருகின்ற 23ஆம் தேதி திறக்கவிருக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை தாங்கள் திறந்து வைப்பீர்கள் என பத்து கோடி தமிழர்களின் சார்பாக நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். 

முதல்வர் அவர்களுக்கும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழினத்தின் சார்பாக இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
"சோழன் குடில்"
15.01.2024

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial