பலஸ்தீனம் - போரும் தீர்வும் சுவிசிலிருந்து சண் தவராஜா



காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹு. உலகின் அநேக நாடுகளின் தலைவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அவர்களின் வேண்டுகோளை - வழக்கம் போன்றே - அவர் அசட்டை செய்துள்ளார். அதேநேரம் இஸ்ரேலின் நட்பு நாடுகளான மேற்குலக நாடுகள் காஸா மக்களுக்கு அவசர தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் மனிதாபிமான மோதல் நிறுத்தத்துக்கு விடுத்த அழைப்பைக் கூட நெதன்யாஹு கவனத்தில் கொள்ளவில்லை. 'எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன்' என்ற பாணியில் காஸா மீதான தாக்குதல்களை இடைவிடாது தொடர்வது என்ற மூர்க்கத்தனத்துடன் இஸ்ரேலிய அரசு நடந்து கொள்வதைப் பார்க்க முடிகின்றது.


தற்போதைய மோதல் ஆரம்பமாகி ஒரு மாதம் ஆகின்றது. இந்த ஒரு மாத காலத்தில் இஸ்ரேலியப் பொதுமக்கள், படையினர் எனக் கொல்லப்பட்டவர்களைப் போன்று பல மடங்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். மோதல் தொடரும் பட்சத்தில் கொலையாகுவோரின் எண்ணிக்கை இன்னமும் பல மடங்கு அதிகரிக்கும் என நிச்சயம் நம்பலாம். வலிமையான உலக நாடுகள் நினைத்தால் மாத்திரமே இந்த மோதல் இப்போதைக்குத் தணியும் என்ற நிலையே உள்ளது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலிய ஆதரவு நாடுகள் மோதல் நீடிப்பதையே விரும்புகின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது. பலஸ்தீனப் பொதுமக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, ஹமாஸ் அமைப்பினர் ஒடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், இஸ்ரேல் அரசினதும், அமெரிக்கா உள்ளிட்ட அதனது நட்பு நாடுகளினதும் எண்ணம் இலகுவில் நிறைவேறுமா?

மக்கள் மத்தியில் மறைந்துவாழும் கெரில்லாக்களை தனியாக இனங்கண்டு வேட்டையாடுவது என்பது இலகுவான காரியமல்ல. அதிலும் கெரில்லாக்கள் மக்கள் அபிமானம் பெற்றவர்களாக விளங்கினால் அவர்களை இனங்கண்டு அழிப்பது மிகவும் கடினமாகி விடும். காஸா நிலவரம் அதனையே உணர்த்துகிறது. காஸா பிராந்தியம் மீது இடையறாத தாக்குதல் தொடர்கின்ற போதிலும், மக்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைத்துறை அச்சுறுத்தி வருகின்ற போதிலும், உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை மறுத்து வருகின்ற போதிலும், தங்கள் பூர்வீக வாழிடங்களை விட்டு வெளியேற மக்கள் மறுத்து வருகின்றனர்.







அதேவேளை, தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இஸ்ரேலியப் படைகள் பலத்த எதிர்த் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நவீன வகை ஆயுதங்கள் இஸ்ரேலியப் படையினர் வசம் மட்டுமன்றி, ஹமாஸ் அமைப்பினர் வசமும் உள்ளன. நீண்டதூர எறிகணைகள், 'ட்ரோன்' எனப்படும் சிறியரக ஆளில்லா விமானங்கள் என சண்டைக் களம் நவீன வகை ஆயுதங்களால் நிரம்பி வழிகின்றது.
போதாக்குறைக்கு ஹமாசின் நண்பர்களும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா ஆரம்பம் முதலே இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அயல்நாடான சிரியாவில் இருந்தும் எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன. தற்போது, யேமன் நாட்டில் உள்ள ஹவுத்தி அமைப்பும் ட்ரோன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் அரசுக்கு நேரடியாக ஆதரவு வழங்கிவரும் அமெரிக்காவின் நிலைகள் ஈராக்கிலும், சிரியாவிலும் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. ஒக்டோபர் நடுப்பகுதி முதல் 23 தடவைகள் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் செயற்பட்டுவரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களே அமெரிக்கப் படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா, இது தொடர்பில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
காஸா மோதல் ஆரம்பமானதன் பின்னான காலப்பகுதியில் ஈரான் மீது தொடர்ச்சியாக அமெரிக்கா விடுத்துவரும் எச்சரிக்கைகள் தொடர்பில் ஈரானிய அரசுத் தலைவர் எப்ராஹிம் ரய்ஸி கடந்த ஞாயிற்றுக் கிழமை பதிலொன்றை வழங்கியிருந்தார்."வாஷிங்ரன் எங்களை எதுவும் செய்ய வேண்டாம் எனச் சொல்கிறது. ஆனால் அவர்கள் இஸ்ரேலுக்கு பாரிய உதவிகளை வழங்கி வருகிறார்கள். இஸ்ரேல் சிவப்புக் கோட்டைக் கடந்து விட்டது, அது ஒவ்வொருவரையும் நடவடிக்கை எடுக்கத் தூண்டும்." இந்த வாசகங்கள் சொல்லும் செய்தி அபாயகரமானது. தற்போதைய மோதலில் நேரடியாகக் களமிறங்க அல்லது தனது ஆதரவு அமைப்புகளைக் களமிறக்க ஈரான் முடிவு செய்துவிட்டதை அவை உணர்த்துகின்றன.

அதேபோன்று, சிரியா மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேலை ரஸ்யா கேட்டுக் கொண்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் அலப்போ நகரங்களில் உள்ள விமான நிலையங்களை இலக்குவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அந்த விமான நிலையங்கள் தற்காலிகமாகச் செயலிழந்து உள்ளன. சிரியாவில் ரஸ்யப் படைகள் அரசுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ள நிலையில் ரஸ்யா விடுத்துள்ள வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.

காஸா மோதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படாதுவிட்டால் அது பிராந்திய மோதலாக மாறும் அபாயமே உள்ளது. அதனை உலகம் தாங்குமா? ஐரோப்பாவின் ஒரு மூலையில் ஒரு வருடத்தையும் கடந்து நடைபெற்று வரும் உக்ரைன் போர் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைச் சமாளிப்பதற்கே உலகம் திணறி வருகின்றது. அதற்கிடையில் மற்றொரு மோதல் அதுவும் பெற்றோலிய உற்பத்திப் பிராந்தியத்தில் ஏற்படுமானால் உலகப் பொருளாதாரம் என்னவாகும்?
 
காஸா மோதல் தொடரும் நிலையில் பலஸ்தீன விடுதலை அமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 'இரு நாடு' என்ற தீர்வை அமுல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என உலகளாவிய அடிப்படையில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. காஸாவில் நடைபெறும் மோதல்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைக் கண்டித்து இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்தப் பட்டியலில் மேலும் பல நாடுகள் இணையும் அறிகுறிகள் தென்படுகின்றன.

மறுபுறம், இஸ்ரேலுக்கான தனது தூதுவரை யோர்தான் திரும்பப் பெற்றுள்ளது. காஸா மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அரபு உலகம் தீவிர நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில் யோர்தானின் முடிவு இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் ஏனைய அரபு நாடுகளையும் தமது நிலைப்பாடு தொடர்பில் மறுபரிசீலனை செய்யத் தூண்டும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்த விடயங்கள் எதனையும் சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் இஸ்ரேலோ, அந்த நாட்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் அமெரிக்காவோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஹமாஸ_க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் முடிவில் ஹமாஸ் இல்லாத காஸாப் பிராந்தியத்தில் பன்னாட்டுச் சமாதானப் படை ஒன்றை நிறுத்துவது தொடர்பிலான ஆலோசனையில் அவை ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
காஸா மோதலுக்கு இராணுவத் தீர்வு ஒன்றே இறுதியானது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் உள்ளதையே இந்தச் செய்தி உணர்த்துகிறது. இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்குத் தனிநாடு ஒன்றே தீர்வு என நினைக்கும் ஏனைய நாடுகள் என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும் என நம்பலாம்.    



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  

https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈

AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial