காஸா - ஆர்ப்பாட்டங்களும், ஆரவாரங்களும் சுவிசிலிருந்து சண் தவராஜா,





நடப்பு உலகில் எரியும் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு வரும் விடயமாக காஸா மீதான போர் உள்ளது. உலக அரங்கில் உள்ள ஏனைய பிரச்சனைகள் யாவற்றையும் இந்த விவகாரம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. பலஸ்தீனர்கள் என்பதற்காக குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் கொல்வது என்ற பிடிவாதமான முடிவில் இஸ்ரேல் செயற்பட்டு வருகின்றது. மக்கள் அழிவைப் பற்றிக் கவலை இல்லை, போர் வெற்றி ஒன்றே இலக்கு என்பதே இஸ்ரேலிய அரசின் சமரசத்துக்கு இடமேயில்லாத நிலைப்பாடாக உள்ளது. உலகின் வல்லமை உள்ள நாடுகள் நினைத்தால் ஒரு நொடியில் முடிவுக்குக் கொண்டுவரப்படக்கூடிய மனித அவலம் காஸா மண்ணில் தொடரும் நிலையில் மனித நேயம்மிக்க மக்கள் உலகளாவிய அடிப்படையில் செய்வதறியாது திகைக்கின்றனர். பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக அவர்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களின் செவிகளில் அவை வழமை போன்றே 'செவிடன் காதில் ஊதிய சங்காக' விளங்குவதை அவதானிக்க முடிகின்றது.


மக்களின் வாக்குகளைப் பெற்றே அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் மக்களின் விருப்பு வெறுப்புகளைக் கருத்தில் எடுத்து அவை செயற்படுகின்றனவா என்பது கேள்விக்கு உரிய விடயமே. பலஸ்தீன விவகாரத்திலும் அது பொருந்தும். உலகின் பெரும்பாலான நாடுகளில் வீதியில் இறங்கி கோசம் போடும் மக்கள் காஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறார்கள். அன்றாடம் கொல்லப்படும் பெறுமதியான மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என அவர்கள் இறைஞ்சுகிறார்கள். குளிரிலும் மழையிலும் வீதியில் இறங்கிப் போராடும் மக்கள் அதனைப் பொழுதுபோக்குக்காகச் செய்யவில்லை என்பதை உலகமே அறியும். உலகின் எங்கோ ஒரு மூலையில் அநியாயமாகக் கொல்லப்பட்டாலும் அதுவும் ஒரு சக மனிதனே என்ற மானுடநேயத்தால் உந்தப்பட்டே அவர்கள் போராடுகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ளும் இதயம்தான் ஆட்சியாளர்களிடம், வல்லரசுகளின் தலைவர்களிடம் இல்லாமல் இருக்கிறது.






நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை லண்டனில் மிகப்பாரிய பேரணி ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இந்தப் பேரணியில் 8 இலட்சம் மக்கள் வரை கலந்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. 2003ஆம் ஆண்டில் ஈராக் மீதான படையெடுப்புக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பேரணியே அண்மைக்காலத்தில் இலண்டனில் நடைபெற்ற அதிகளவான மக்கள் கலந்துகொண்ட பேரணியாகக் கருதப்படுகின்றது. அந்தப் பேரணியில் 1.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். காஸா மீதான தாக்குதல்கள் ஆரம்பமான பின்னர் லண்டனிலும், இங்கிலாந்தின் ஏனைய நகரங்களிலும் பல பேரணிகள் நடைபெற்று இருந்தன. எனினும் 11ஆம் திகதி நடைபெற்ற பேரணியே அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.


இதேபோன்ற பேரணிகள் உலகின் பல நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமேயே உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், யேர்மனி, அவுஸ்திரேலியா என உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ள நாடுகளில், அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை அடியொற்றி இத்தகைய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காஸா அவலம் முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை மறுப்பதற்கில்லை.


மறுபுறம், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்பவற்றை நடத்துவதால் பாரிய பயன் எதுவும் விளையுமா? இதுவரை காலமும் அத்தகைய பயன் எதுவும் விளைந்திருக்கிறதா? என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே.

 
மாற்றங்கள் அத்தனை இலகுவில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், துயரப்படும் மக்களுக்கு உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு சக மனிதன் ஒருவன் நமக்காகக் கவலைப்படுகிறான் என்று வெளிவரும் சேதியே ஒரு ஆறுதல்தான். அது மாத்திரமன்றி மனச்சாட்சி கொண்ட மனிதர்கள் தமது கொள்கை நிலைப்பாட்டை, நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வதற்கு, மீளாய்வு செய்து கொள்வதற்கு ஒரு புள்ளி தேவைப்படுகின்றது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அது தொடர்பான செய்திகள் அத்தகைய ஒரு தொடக்கப் புள்ளியாகக் கூட அமையக் கூடும்.


உலக வரலாறு எப்போதுமே மீண்டும், மீண்டும் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது எப்போதும் மறுவாசிப்புக்கு உள்ளாகும் என்பதே இயங்கியல். ஒரு காலத்தில் வெற்றி பெற்றவர்களாக வலம் வந்தவர்களின் சாதனைகள்(?) கேள்விக்கு உட்படுத்தப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நடப்புகள் கூட நாளை, நாளை மறுநாள் கேள்விக்கு இலக்காகியே தீரும். இந்த விதி ஆட்சியாளர்களுக்கு மட்டும் பொருந்துகின்ற ஒன்றல்ல. வெகுமக்களுக்கும் பொருந்தும். உலக மானுடன் ஒருவன் துன்புறுத்தப்படும் போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? உனது மூதாதையர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ற கேள்விகள் வரலாற்றில் நமக்கான இடத்தை உறுதி செய்யும். ஆகவே, சக மனிதனின் துயரத்தில் நாமும் ஏதாவது ஒரு விதத்தில் பங்கெடுப்பது நமது தார்மீகக் கடமை.


இதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவான போராட்டங்கள், பேரணிகளுக்கும் குறைவில்லை. காஸா ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் போன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்பு இல்லாதுவிட்டாலும் அத்தகைய நிகழ்வுகளிலும் கணிசமான மங்கள் பங்கேற்பை அவதானிக்க முடிகின்றது. ஆனால், அவை தொடர்பான செய்திகளில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது உலக அரசியல் போக்கைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவக்கூடும்.


பொதுவாக காஸா ஆதரவுப் பேரணிகள் மனிதாபிமான அடிப்படையில், போரில் கொல்லப்படும் மக்கள் நலன் சார்ந்தவையாகவே செய்திகளாக வெளிவருகின்றன. மறுபுறம், இஸ்ரேல் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறையை, மனப்போக்கை, வன்மத்தை, வெறுப்பைக் கண்டிப்பவையாக உள்ளன.


காஸா மோதல் ஆரம்பமான போதில் யூதர்கள் கொல்லப்பட்டமையை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களில் யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்வதை எவ்வாறு புரிந்து கொள்வது? யூதர்களைப் பாதுகாப்பதற்காகவே இஸ்ரேல் காஸாவைக் குண்டுவீசித் தகர்க்கிறது, மருத்துவமனைகள் என்றுகூடக் கருதாமல் தாக்குதல் நடத்துகிறது, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களைக் கொலை செய்கிறது, உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தடுக்கிறது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?


நலன் என்ற அச்சிலேயே உலக அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக கொலையைப் புரிபவனையும், கொலைக்கு ஆளாகுபவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது எவ்வகையில் நியாயம்? எத்தனை காலம்தான் இதுபோன்ற நிலை நீடிக்கப் போகின்றதோ தெரியவில்லை? 


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  

https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss  👈👈

AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube






Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial