நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மாவட்ட அரசியல் குழுவினர் மற்றும் அரச அதிகாரிகள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோல் 2022 டிசம்பர் 22 மற்றும் 2023 ஏப்ரல் 10 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
நுவரெலியாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்கவர் பகுதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் மூலம், இது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
Post a Comment