இமயம் சரிந்தது ! பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார் ! தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை - தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவம்பர் 20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார். கடந்த ஜூனில் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது. ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்குவதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு விருதினை வழங்கினார்.
தனிபாணி கொள்ளாமல், தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.
1955 முதல் 2014 வரையில் அவர் வசனகர்த்தாவாக இயங்கியுள்ளார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், வடிவேலு போன்ற நடிகர்கள் நடித்த படத்திற்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், சுமார் 1000 திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரினான ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும்.
நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
rip
ReplyDeletePost a Comment