டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை தீர்மானிக்கும் அனுமதியை ஐஎம்எப் இடம் வழங்கினால் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதோடு ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
ஊடகம் ஒன்றிடம் கருத்து பகிர்ந்து கொள்ளும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பிரதானமான நிபந்தனை என்னவென்றால் இலங்கையினுடைய நாணய மாற்று விகிதத்தினை அரசாங்கம் நிர்ணயிப்பதை விட சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான்.
சந்தை சக்திகளின் ஊடாக சுதந்திரமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றும், மத்திய வங்கி தலையிடக் கூடாது என்றும் கூறப்பட்டது.
இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமாக இருந்தால் இப்போது இருக்கின்ற தற்பொழுது இருக்கின்ற நாணய மாற்று விகிதம் இன்னும் தேய்வடைந்து செல்லக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
பொருட்களின் விலை அதிகரிக்கும்
அவ்வாறு தேய்வடைந்து சென்றால் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் இன்னும் அதிகரிக்கும்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இறக்குமதி நுகர்வில் தான் தங்கியிருக்கின்றார்கள்.
அரிசி கூட சில நேரங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உண்டு.
அரிசிக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றோம்.
எனவே இந்த பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
டொலரின் பெறுமதி உயரும்
தற்போது டொலர் ஒன்று 370 ரூபா என்ற நிலையில் உள்ளது. சுதந்திரமாக சந்தையில் நிர்ணயிக்க விடுகின்ற போது டொலரின் பெறுமதி 450, 500, 600, 700 என்ற அளவில் போகும்.
அப்படிப் போகின்ற போது இறக்குமதி செய்கின்ற பொருட்களின் விலைகள், குறிப்பாக கோதுமையின் விலை கடுமையாக அதிகரிக்கும்.
இதன் விளைவினால், போஷாக்கின்மை, பட்டினி, நோய்வாய்ப்படுதல் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இதனை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமாக இருந்தால் உள்நாட்டு பொருளாதாரத்தை முதலில் கட்டியெழுப்ப வேண்டும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற, அரிசி, சிறுதானியங்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள், விலங்கு வேலாண்மை போன்ற உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதற்கு ஈடாக நாங்கள் செயலாற்றும் பட்சத்தில் இது பாரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.
Post a Comment