தெருவோரம் டூ சினிமா பைனான்சியர்! ரெய்டில் சிக்கிய அன்பு செழியன்! கடனை வசூலிக்கும் ஸ்டைலே தனி தானாம்!
சென்னை : வருமான வரித்துறை சோதனையில் சிக்கி மீண்டும் இந்திய அளவில் போலீஸ் புயலாக இருக்கும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தெருவோரங்களில் சிறு வியாபாரிகளுக்கு கந்து வட்டி கொடுத்து வந்த அவர் பெரும் படங்களுக்கு பைனான்சியராக மாறியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் திரையரங்கு அதிபர் என சினிமாவில் பல முகங்களைக் கொண்டவர் அன்பு செழியன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு 10 திரைப்படங்கள் வெளியாகிறது என்றால் அதில் குறைந்தது ஏழு திரைப்படங்களிலாவது அன்புச் செழியனின் பங்கு இருக்கும் என்கின்றனர் திரை துறையினர் அந்த அளவுக்கு சினிமா துறையில் அவரது செல்வாக்கு உள்ளது.
அன்பு செழியன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அன்பு செழியனின் மகளின் திருமணத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆர்யா, வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் தங்கம் தென்னரசு சேகர்பாபு டிடிவி தினகரன் ஆர் பி உதயகுமார் செல்லூர் ராஜு எஸ் பி வேலுமணி ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர் அந்த அளவுக்கு சினிமாவிலும் அரசியலிலும் செல்வாக்கு மிக்கவராக திகழ்கிறார்.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் அன்பு செழியனுக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னையில் உள்ள வீடு அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள் திரையரங்குகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் நகையை மதிப்பீடு செய்யும் பணிகளும் கைப்பற்றப்பட்ட பணத்தை என்னும் பணிகளும் தொடர்ந்து வருகிறது.
அன்புச் செழியன் யார் ?
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனைகளில் சுமார் 200 கோடி அளவுக்கு வருமான வரி மோசடி நடத்தப்பட்டு இருப்பதாகவும் 25 கோடி ரூபாய் பணம் நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அன்புச் செழியன் யார் அவரது பின்னணி என்ன சினிமாவில் இவ்வளவு பெரிய பிரபலமாக அவர் வந்தது எப்படி என்பது குறித்து பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.
பின்னணி என்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட அன்புச்செழியன் 1990 ஆம் ஆண்டு வாக்கில் குடும்பத்துடன் மதுரையில் குடியேறியுள்ளார். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அதில் கிடைத்த பணத்தை சாலையோர வியாபாரிகளுக்கும் சிறு சிறு வணிகர்களுக்கும் வட்டிக்கு கொடுத்து பைனான்ஸ் தொழிலை தொடங்கி இருக்கிறார். நல்ல லாபம் கிடைத்த நிலையில் பெரிய வியாபாரிகளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கும் கடன் கொடுத்து வந்துள்ளார்.
வட்டித் தொழில்
பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்த அவர் மதுரையிலும் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார் எவ்வளவு பணமாக இருந்தாலும் உடனடியாக கொடுத்து வந்த அவர் தொடர்ந்து அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் பெரிய பெரிய படங்களுக்கும் நிதி கொடுத்து வந்துள்ளார். மற்றவர்களை விட குறைந்த அளவில் அன்புச் செழியன் வட்டி வசூலிப்பதாகவும் இதனால் ஏராளமான திரை தயாரிப்பாளர்கள் அவரை அணுகியதாக கூறப்படுகிறது.
மிரட்டல் வழக்குகள்
விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல படத்திற்கு தான் முதன்முதலாக அன்புச்செழியன் நிதி அளித்ததாகவும் அதன் பிறகு அவரது தொழில் விரிவடைந்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்த அவர் பண விஷயத்தில் மிகவும் கரார் என்கின்றனர். சொன்ன தேதியில் பணத்தை கொடுக்காவிட்டால் ஆட்களை அனுப்பி மிரட்டுவது வீடு நிலங்களை எழுதி வாங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் இருக்கிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் சகோதரர் வெங்கடேஸ்வரன் தற்கொலை சம்பவத்தில் அன்புச் செழியனின் பெயர் லேசாக அடிபட்டது ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் இல்லை.
அதிரடி கைது
இதேபோல முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்துக்கு பைனான்ஸ் செய்த அன்புச் செழியன் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக ஒன்றரை கோடி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கந்து வெட்டி கேட்டு மிரட்டியதாக அன்பு சொழியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளிவந்தாலும் அன்புச் செழியன் தொழிலில் சுணக்கம் காட்ட வில்லை அடுத்தடுத்து சினிமாவில் தொழிலை விரிவுபடுத்திய அவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து கோபுரம் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தயாரிப்பாளர் அவதாரம்
தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த வெள்ளைக்காரத்துரை தனுஷ் நடித்த தங்கமகன் விஷால் நடித்த மருது விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை தயாரித்து வெளியிட்டார். அதன் பிறகு இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்புச்செழியனுக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மீண்டும் சினிமாவில் காலூன்றிய அவர் 2020 ஆம் ஆண்டு விஜய் நடித்த பிகில் திரைப்படம் தொடர்பாக வருமான வரி சோதனையில் சிக்கினார். அப்போது 77 கோடி ரொக்கம் மற்றும் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அன்புச் செழியன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பிறகு 165 கோடி ரூபாய் செலுத்த ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் அன்புச் செழியன்.
Post a Comment