அ.தி.மு.க., யாருக்கு வழக்கில் நாளை தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் பழனிசாமி தரப்பில் நடத்தப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.இதையடுத்து இந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன. பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிட்டனர்.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பதிலளித்து பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் வாதிட்டனர்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடந்தன. வாதங்கள் முடிந்ததை அடுத்து ஆக. 11ல் இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளி வைத்தார்.வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்கள் அளிக்க விரும்பினால் அதை அளிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். பழனிசாமி பன்னீர்செல்வம் இடையேயான அதிகாரப் போட்டி பொதுக்குழு அறிவிப்பு மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை பிறப்பிக்கும் என்ற தகவல் வெளியாகியது.ஆனால் வழக்குகள் விசாரணை பட்டியலில் இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் இடம்பெறவில்லை. இருப்பினும் வழக்கு விசாரணை பட்டியலில் இறுதி நேரத்திலும் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதால் எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம். இந்த தீர்ப்புக்கு பின்னரே பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையிலான கட்சி தலைமை போட்டிக்கு முடிவு வரும் என்று தெரிகிறது.
Post a Comment