போனை போட்ட ‘முக்கிய புள்ளி’! ஓவர் நைட்டில் யூடர்ன் போட்ட டாக்டர்! ஓ..மனமாற்றத்துக்கு இதுதான் காரணமா?
மதுரை என்றாலே பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பெயர் போன மாவட்டம். அரசியலாக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டே கடந்த ஆண்டுகளிலும் சரி இப்போது நிகழ்ந்திருக்கிறது.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மதுரை மாவட்டம் அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. நேற்று பாஜக திமுக இடையே நடந்த மோதல் தேசிய அளவிலும் கவனம் பெற்று இருக்கிறது.
மதுரையில் மோதல்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வில் பாஜக திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜகவினரை தமிழக நிதி அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒருமையில் பேசியதாக கூறி பாஜகவின் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்திலிருந்து வெளியே புறப்பட்டபோது பாஜகவினர் அவர் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு செருப்பை வீசி முழக்கம் இட்டனர்.
பழனிவேல் தியாகராஜன்
தமிழக முழுவதும் பலரும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 'பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை வைப்பதற்கு இது சரியான தருணம் இல்லை நாளை பேசுவோம்' என கூறினார். அதே நேரத்தில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை உடன்பிறப்புகள் ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் இறங்கினர்.
டாக்டர் சரவணன்
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவரான டாக்டர் சரவணன், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்தார். என்ன தகுதி இருக்கிறது எனப் பேசிய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் போட்டியிட தயாரா? எனவும் கடுமையாக விமர்சித்தார். பாஜக தொண்டர்களின் செயலுக்கு நியாயம் கற்பிப்பது போல சரவனின் பேச்சு இருப்பதாக கடும் கொந்தளிப்பு எழுந்த நிலையில் அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதற்கு உதாரணமாக நள்ளிரவில் தான் அந்த திரைக்கதையில் மாற்றம் ஏற்பட்டது.
நள்ளிரவில் சந்திப்பு
நள்ளிரவில் திடீரென நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்குச் சென்ற டாக்டர் சரவணன், நேற்று விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் 'எனக்கு வெறுப்பு அரசியல் மத அரசியல் ஒத்துவரவில்லை மனதில் இருந்ததை எல்லாம் அமைச்சரிடம் கொட்டி விட்டேன் இன்று இரவு நிம்மதியாக தூங்குவேன் இனி நான் பாஜகவில் தொடர போவதில்லை' என அதிரடி காட்டினார். 'என் உடலில் ஓடுவது திராவிட ரத்தம் எனவும் திமுக எனது தாய் வீடு' எனுவும் சரவணன் கூறிய நிலையில் அவர் திமுகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
திடீர் மனமாற்றம்?
இந்த நிலையில் தான் டாக்டர் சரவணன் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட அரசியல் களத்தில் பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. மதுரையில் இருக்கும் முக்கிய 'அரசியல் வாரிசு' ஒருவர் தனது நெருங்கிய 'நான்கெழுத்து' ஆதரவாளர் மூலம் டாக்டர் சரவணனிடம் பேசியதாகவும், "மதுரையில் மிகவும் புகழ்பெற்ற, செல்வாக்கு நிறைந்த, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்தது மதுரைக்கு அவமானம்! அப்படி பேசி இருக்கக் கூடாது. இது மதுரையில் நடக்கும் அரசியலுக்கு நல்லதல்ல' என "அறிவுரை" கூறியதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட தாக்குதல்கள்
மேலும் கட்சி தொடர்பாக மோதல்கள் இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்தியதின் பேரிலேயே சரவணன் இரவோடு இரவாக நிதியமைச்சனை சந்தித்ததாக கூறப்படுகிறது. இன்னொரு தகவலும் மதுரை மாவட்டத்தில் பரவி வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசியலுக்கு வந்தவர் என்றாலும் அவரது அப்பா பழனிவேல் தியாகராஜன் அவரது தாத்தா காலத்தில் இருந்தே மதுரையில் மிகவும் செல்வாக்கு பெற்ற குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பல்வேறு கோவில்களில் திருப்பணி செய்துள்ளவர்கள் என்பவரோடு மதுரையில் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் மிகவும் முக்கியமானது.
போனில் அறிவுரை
மண்ணின் மைந்தரான பழனிவேல் தியாகராஜனின் சொந்த ஊரிலேயே அவரை சரவணன் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என மதுரையில் செல்வாக்குள்ள பல்வேறு முக்கிய நபர்களும் சரவணனிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசியதாகவும், இதனை அடுத்தே நள்ளிரவு சந்திப்பு அரங்கேறி இருக்கிறது என்கின்றனர் மதுரை வாசிகள். தொடர்ந்து திமுகவில் சரவணன் இணையும் நிகழ்வும் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் நடக்கும் என்கின்றனர் விவரம் அறிந்த நபர்கள்.
Post a Comment