அதிக பட்ஜெட்டில் ‘எம்புரான்’ தலைப்புடன் உருவாகும் ‘லூசிஃபர்’ 2-ம் பாகம்
மோகன்லால் நடிக்கும் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாவது பாகம் அதிக பொருட்செலவில் பான் இந்தியா முறையில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தில் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கி வருகிற இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பிருத்விராஜ் இயக்கும் இப்படத்திற்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சினிமாவாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது.
Post a Comment