பள்ளி மாணவி மரணம்.. வன்முறை களமாக மாறிய தனியார் பள்ளி..50 வாகனங்களுக்கு தீ வைப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவி சில நாட்களுக்கு முன் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் குற்றச்சாட்டு
தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதேபோல பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக குற்றம் சுமத்திய மாணவியின் உறவினர்கள், அவர் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின்மீதும், ஆசிரியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடற்கூறாய்வில் தகவல்
இதனிடையே பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவமனை உடல் கூறு ஆய்வில் மாணவி இறப்பிற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி உறவினர்களும், போராட்டாக்காரர்களும் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் வன்முறை
இந்த நிலையில் தனியார் மெட்ரிக் பள்ளி முன் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் இறப்பு நீதி கேட்டு கோஷம் எழுப்பினர். அப்போது பள்ளிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்கள் தாக்கியதில், போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி சூறையாடல்
இந்த நிலையில் போலீசாரின் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு, பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கே இருந்த காவலாளி அறையை சூறையாடினர். தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டது. இதன்பின்னர் பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், மொத்தமாக சூறையாடி தீ வைத்தனர். பின்னர் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்தன.
வெடித்து சிதறிய சிலிண்டர்
தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பெட்ரோல் டேங்குகள் மற்றும் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் எவ்வளவு பேர் காயமடைந்தனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இதனால் நெடுஞ்சாலையில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மெட்ரிக் பள்ளி வளாகமே வன்முறை கலமாக காட்சியளிக்கிறது.
Post a Comment