ஆஸ்கர் அழைப்பை ஏற்ற நடிகர் சூர்யா
ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்று நடிகர் சூர்யா உறுப்பினர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் ஆவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த விஷயத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்பதாக ட்வீட் செய்து இருக்கிறார். அவர் அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது, 'எனக்கு இந்த அழைப்பை கொடுத்த அகாடமிக்கு நன்றி. இதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. உங்கள் அனைவரையும் எப்போதும் பெருமை கொள்ள செய்வேன்' எனவும் அந்த ட்வீட்டில் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த விஷயத்துக்காக நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 'தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!' எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த ட்வீட்டுக்கு சூர்யா, 'தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளை தொடர்ந்து தர முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்' எனத் தெரிவிதுள்ளார்.
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் , சிறந்த படங்கள் பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படுவைகளுக்குத் தங்களது வாக்கினை அளிக்கலாம். மேலும் ஆஸ்கரின் சினிமா சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளலாம்.
Post a Comment