அதிமுக பொதுக்குழுவுக்காக காத்திருந்த அண்ணாமலை

 

அதிமுக பொதுக்குழுவுக்காக காத்திருந்த அண்ணாமலை

அதிமுக பொதுக்குழுவுக்காக காத்திருந்த அண்ணாமலை

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அதிமுகவில் சினிமாவை மிஞ்சும் அளவிலான சம்பவங்கள் நடந்தன. அதன் க்ளைமேக்ஸ் இன்று (ஜூன் 23) முடிந்தது.

அதிமுக பொதுக்குழு இன்று காலை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வீட்டுக்குக் கிளம்பினர். இந்தநிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் முதலில் பசுமை வழிச் சாலையில் இருக்கும் எடப்பாடியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் அங்கே இருந்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரும், பழங்குடியின தலைவருமான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பாஜக, அதன் தோழமை மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டு வரும் நிலையில் இன்று சி.டி.ரவியும், அண்ணாமலையும் எடப்பாடியை சந்தித்தனர். அதிமுகவுக்கு 66 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதிமுகவின் ஆதரவைக் கேட்டுள்ளனர். அதேசமயத்தில் நாளை திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் டெல்லிக்கு வரவேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.

30 நிமிடம் ஈபிஎஸுடன் பேசிய நிலையில், சிடி ரவியும், அண்ணாமலையும் உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்று இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

சலசலப்புடன் பொதுக்குழு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே பாஜக தலைவர்கள் அதிமுகவினரின் இரு தலைவர்களையும் சந்தித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழுவில் நடந்த விவகாரம் பற்றியும், ஒற்றைத் தலைமை பற்றியும் விவாதிக்கப்பட்டதா என அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பாமகவிடம் டெல்லியிலிருந்தே போனில் பேசி ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டார். பாமகவும் தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டது.

ஏற்கனவே அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தெரிவித்துவிட்டார் அண்ணாமலை. அதிமுகவில் கடந்த ஒரு வாரமாகவே ஒரே குழப்பமாக இருந்ததால் பொதுக்குழு முடிந்து ஒரு தெளிவான பிறகு முறைப்படி ஆதரவு கேட்கலாம் என்று காத்திருந்தோம். ஆனால் பொதுக்குழுவிலும் சர்ச்சைகள் வெடித்த நிலையில், நாளை குடியரசுத் தலைவர் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் நேரமில்லாத நிலையில் இன்று இருவரையும் சந்தித்தார் அண்ணாமலை.

அதுவும் எடப்பாடியிடம்தான் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள், பன்னீரிடம் சிலர்தான் இருக்கிறார்கள் என்ற கருத்தும் பாஜகவுக்குள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இருவரையும் சேர்த்துச் சந்திப்பது இப்போது இயலாத ஒன்றாக அரசியல் சூழல் அமைந்துவிட்டது. இப்போதைக்கு ஒருவரை மட்டுமே சந்தித்தால் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக குறிப்பிட்ட ஒருவருக்கு ஆதரவு தருகிறது என்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதை இப்போது பாஜக தவிர்க்க நினைக்கிறது. அதனால்தான் இருவரையும் அடுத்தடுத்து சந்தித்தார்கள் அண்ணாமலையும், சி.டி.ரவியும்” என்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial