பன்னீர் வருகை : ஜெயக்குமார் எஸ்கேப் - தலைமை கழகத்தில் பரபரப்பு!

 

பன்னீர் வருகை : ஜெயக்குமார் எஸ்கேப் - தலைமை கழகத்தில் பரபரப்பு!

பன்னீர் வருகை : ஜெயக்குமார் எஸ்கேப் - தலைமை கழகத்தில் பரபரப்பு!

ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி எடப்பாடி ஆதரவாளர்கள் உறுதியாகப் பேசியதை அடுத்து, அதிமுகவுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அன்று தொடங்கி நேற்றும் இன்றும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களோடு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி முடிவெடுப்பது என்று எடப்பாடி உறுதியாக இருந்தார். ஆனால் நேற்று இரவு எடப்பாடியைச் சந்தித்துவிட்டு தன்னை சந்தித்த வைத்தியலிங்கம் உள்ளிட்டோரிடம் பன்னீர் செல்வம், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானம் எடப்பாடிக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா என்று கேட்டிருக்கிறார்.

இந்த விஷயம் எடப்பாடிக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்த பின்னணியில் தான் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம், “யாரும் பொதுச் செயலாளராக வரமுடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. இப்படி செய்திகள் வருவது கட்சி வளர்ச்சிக்கு உகந்ததல்ல” என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்ற எடப்பாடிக்கு ஓ.பன்னீர்செல்வம் சட்டதிட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி செக் வைத்துவிட்டார் என்று நேற்று இரவு அதிமுகவில் டாப் லெவலில் பேசப்பட்டது.

இந்தச்சூழலில் இன்று (ஜூன் 16) காலை எடப்பாடி பழனிசாமி தன் சொந்த ஊரான சேலத்துக்குப் புறப்பட்டார். ‘தனக்குச் சாதகமான விஷயங்கள் தொடர்ந்து நடக்க வாய்ப்பிருந்தால் அவர் சென்னையிலேயே இருந்திருப்பார். ஆனால் ஏதோ ஒரு நெருடலில் தான் திடீரென சேலத்துக்குச் சென்றுவிட்டார்’ என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

இதுவொருபக்கம் என்றால், அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொன்னையன், வைகை செல்வம், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தீர்மானக் குழு இன்று காலை 11.30 மணி வாக்கில் அதிமுக தலைமை கழகத்தில் கூடியது.

எடப்பாடி சேலம் சென்று இறங்கிய சில நிமிடங்களில் தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை கழகத்துக்கு வருகிறார் என்று தகவல் தரப்பட்டது. இதையடுத்து நிருபர்கள் தலைமை கழக வளாகத்தில் குவிந்தனர். உள்ளே தீர்மானங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த குழுவினருக்கும் இந்த தகவல் தெரிந்தது.

ஓ.பன்னீர் திடீரென தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் என்றதும் தீர்மானக் குழு உறுப்பினர்கள் அதுபற்றி ஆலோசித்தனர். பன்னீர் செல்வம் வரும் தகவல் அறிந்து அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே கீழே இறங்கி வந்தனர் சி.வி.சண்முகமும் ஜெயக்குமாரும். தீர்மானக் குழு உறுப்பினர்கள் காலை தலைமை கழகத்துக்கு வரும் போது பத்திரிகையாளர்கள் யாரும் இல்லாத நிலையில் பன்னீர் செல்வத்தின் வருகைக்காக பத்திரிகையாளர்களும், பெருமளவிலான தொண்டர்களும் திரண்டுவிட்டனர்.

கீழே வந்த ஜெயக்குமாரிடம் சூழ்ந்துகொண்ட நிருபர்கள், பன்னீர் செல்வம் வருவதால் தான் நீங்கள் வெளியே வந்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு, “18ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஓபிஎஸ் வந்ததற்கும், நான் வெளியேறியதற்கும் சம்பந்தம் கிடையாது. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் எடுக்கப்படும்” என்று கூறினார்.

ஜெயக்குமார் பேட்டி அளித்துக்கொண்டிருக்கும் போதே அவருக்கு சில அடி அருகில் நின்று கொண்டு தொண்டர்கள் சென்னை பாஷையில் ஜெயக்குமாரைத் திட்டி தீர்த்தனர். ஜெயக்குமாரின் பேட்டியைப் பதிவு செய்த கேமராக்கள், தொண்டர்களின் அந்த அர்ச்சனையையும் பதிவு செய்து கொண்டன.

ஜெயக்குமாரைத் தொடர்ந்து வளர்மதியும் கீழே இறங்கி வந்தார். அவரை பார்த்தும் தொண்டர்கள் கடுமையாகக் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஜெயக்குமாரின் காரிலேயே ஏறி வளர்மதியும் புறப்பட்டார். அப்போது ஜெயக்குமாரின் காரை சில தொண்டர்கள் தட்டினார்கள்.

இந்த களேபரங்கள் நடந்து முடிந்ததும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். முழுக்க, முழுக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நிறைந்த அங்கே அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுந்தன. இரண்டு நாட்களாக சோர்வாகக் காட்சியளித்த ஓபிஎஸ் இன்று நடையிலும், பார்வையிலும் உற்சாகமாகவே இருந்தார்.

தலைமை கழகத்துக்குள் சென்று தீர்மானக் குழுவினரோடு அமர்ந்தார் ஓபிஎஸ். அப்போது பொன்னையன் தீர்மானங்களைப் பற்றி அவரிடம் விளக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் வைகை செல்வனை பார்த்து, ‘நீங்கள் சொல்லுங்க வைகை’ என்றார் ஓபிஎஸ்.

ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம் ஆகிய மூவரும் பன்னீரின் வருகைக்கு முன்னதாக கிளம்பிச் சென்றுவிட்ட நிலையில் மீதமிருக்கும் தீர்மானக் குழு உறுப்பினர்களோடு நடுநாயகமாக அமர்ந்து ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆலோசனை முடிந்து பன்னீர் செல்வம் புறப்பட்டார்.

அப்போது தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்குமா, ஒற்றைத் தலைமை வருமா என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் எழுந்த நிலையில், ‘கிடைக்கும்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் ஓபிஎஸ் .

கீழே இறங்கிய வைகை செல்வன், பொன்னையன் ஆகியோர் செய்தியாளர்களிடம் ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமை பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்தனர். “சி.வி.சண்முகத்துக்குத் திருச்சியில் கூட்டம் இருப்பதால் புறப்பட்டு சென்றார். ஜெயக்குமாருக்கு வேலை இருப்பதால் சென்றார்” என்று அவர்கள் பாதியில் சென்றதற்கு பொன்னையன் விளக்கமளித்தார்.

இதே நேரம் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியோடு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். இன்று தலைமை கழகத்துக்குப் பன்னீர் செல்வம் திடீரென வந்ததும், அங்கே அவர் நடந்து கொண்ட விதமும் பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு ஒரு வித தெம்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial