ஜெயக்குமாரை நீக்க ஓபிஎஸ் அழுத்தம்
அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜூன் 14 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டிதான் முழு காரணம் என்று கருதுகிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடிக்கு பரிந்துரைத்திருக்கிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசுகையில், “ ஒற்றைத் தலைமை என்ற இந்த பிரச்சினை யாரால், எப்படி வந்தது? என்பதை நாங்கள் இருவரும் அமர்ந்து பேசி, சம்பந்தப்பட்டவரை கண்டிக்க வேண்டும். எதுவும் வெளியில் பேசக்கூடாது என்று முடிவு எடுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வெளியே வந்து யார் பேட்டி கொடுக்க சொன்னது? (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத்தான் பன்னீர் குறிப்பிடுகிறார்). அதுதான் இன்றைய பிரச்சினைக்கே காரணம்” என்றவரிடம், அப்படி விதிமுறைகளை மீறி பேட்டி கொடுத்தவர் கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த பன்னீர், “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
மேலும், “முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை விட்டுக் கொடுத்தது போல ஒருங்கிணைப்பாளர் பதவியையும் விட்டுக் கொடுப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்ததற்கு மூலக்காரணமே தொண்டர்கள் தான். தொண்டர்கள் மனம் சஞ்சலப்படக்கூடாது. கட்சி எந்த நிலையிலும் சிறு பின்னடைவை, சறுக்கலை பிளவை ஏற்படுத்த பன்னீர்செல்வம் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அத்தனை நிலைகளிலும் அனைத்தையும் விட்டுக்கொடுத்து சென்று இருக்கிறேன். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவது இல்லை. என்னைத் தொண்டர்களிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது. என்னை யாரும் ஓரங்கட்ட முடியாது” என்றார் ஓபிஎஸ்.
பொதுக்குழுவுக்கு முன்னதாக கட்சி நடவடிக்கைகளை மீறியதாக ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு ஓபிஎஸ் நிபந்தனை விதித்திருக்கிறார்.
Post a Comment