ராமதாஸின் டான் விமர்சனம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் டான் படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டான். இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், குடும்பத்தினரிடையே வரவேற்பை பெற்றது. முதல் பாதி பள்ளி கல்லூரியில் நடக்கும் கலாட்டா, காதல் கதையம்சமாக நகரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அப்பா மகன் செண்டிமெண்ட்டாக எடுக்கப்பட்டுள்ளது.
தன் மகன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என்று அனைத்து கஷ்டத்தையும் தானே அனுபவித்து வாழ்ந்த அப்பாவின் (சமுத்திரக்கனி) மறைவுக்கு பிறகுதான் சிவகார்த்தியேகனுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவருகிறது. அதன் பின் தனது விருப்பப்படி திரைத்துறையில் தடம் பதிக்கும் சிவகார்த்திகேயன், அப்பாவின் விருப்பப்படி பொறியாளர் பட்டமும் பெறுகிறார்.
இந்த படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும் பாராட்டியுள்ளார்.
"நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You)” என்ற பாடத்தைச் சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை ரீட்வீட் செய்துள்ள சிவகார்த்திகேயன் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment