அரசியலமைப்பு சட்டத்தையே திருத்தும்போது அதிமுக சட்டத்தைத் திருத்த முடியாதா? எடப்பாடி ஆலோசனையில் எழுந்த கேள்வி!
ஒற்றைத் தலைமை பிரச்சினை அதிமுகவில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் இருந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 16) காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றுவிட்டார்.இன்று முற்பகல் சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு சேலத்தில் அதிமுகவினர் பிரம்மாண்ட முறையில் வரவேற்பு அளித்தனர். பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவரை கட்சி நிர்வாகிகள் வரிசையாக சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கம் சென்னையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருக்க, இன்னொரு துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி. முனுசாமி சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்கு சென்று அவரோடு இன்று விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் மோகன், மாசெ இளங்கோவன் உள்ளிட்ட பலர் சேலத்தில் இன்று எடப்பாடியை சந்தித்தார்கள். ஒற்றைத் தலைமை எடப்பாடி என்று சேலம் எங்கும் போஸ்டர்கள் பளிச்சிட்டன.
திடீரென எடப்பாடி சென்னையை விட்டு சேலத்துக்குப் புறப்பட்டது ஏன், அவரது தரப்பில் என்ன நடக்கிறது என எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
“நேற்று இரவு வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும்போது ஒற்றைத் தலைமை என்பதெல்லாம் அவரவர் சொந்தக் கருத்து. அதிமுக கட்சி சட்டத்தில் அதற்கு இடமில்லை’ என்று சொன்னது எடப்பாடியை நேற்று இரவே கோபப்படுத்தியிருக்கிறது. தன்னை சந்திக்க வந்தவர்களிடம் நேற்று இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார் எடப்பாடி. ஒற்றைத் தலைமைக்கு அதிமுகவின் சட்டத்தில் இடமில்லை என்று சொன்னது பற்றி நேற்று எடப்பாடியின் இல்லத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, “பார்லிமெண்ட்ல அரசியலமைப்பு சட்டத்தையே பல முறை திருத்தம் பண்ணிட்டாங்க. அதிமுக சட்டத்தைத் திருத்த முடியாதா?’ என்று புதுக்கோட்டை நிர்வாகி ஒருவர் பதில்கூற அவர் பக்கம் திரும்பிச் சிரித்திருக்கிறார் எடப்பாடி. அப்போது எடப்பாடி, ‘என்னால கட்சிக்கு எந்த கெடுதலும் நடக்குறதை நான் விரும்பல., சட்டமன்றத் தேர்தல்ல நான் எப்படி உழைச்சேன்னு உங்களுக்குத் தெரியும். பேருக்கு கட்சி நடத்திக்கிட்டிருந்தோம்னா, பார்லிமெண்ட் தேர்தல்ல இப்ப இருக்குறதை விட கீழ போயிடுவோம். அதுக்கப்புறம் 2026 ல சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்போது இன்னும் அதிக பாதிப்பாயிடும். அதனால ஒற்றைத் தலைமையா இருந்தாதான் கட்சிய காப்பாத்த முடியும்.
நான் முதலமைச்சர் வேட்பாளரா என்னை தேர்ந்தெடுப்பவே சொன்னேன்.. ‘வேட்பாளர்களை தேர்ந்தெடுக்குற முழு அதிகாரத்தையும் என்கிட்ட கொடுங்க. நான் கட்சியை ஜெயிக்க வைக்குறேன்னு சொன்னேன். ஆனா அப்ப என்கிட்ட அதிகாரத்தை முழுசா கொடுக்கல. அதனாலதான் நாம தோத்தோம். இப்படியே போய்க்கிட்டிருந்தோம்னா இன்னும் மோசமாகும். இப்ப நடக்குறதெல்லாம் எனக்குப் பிடிக்கல. இயற்கையா என்ன நடக்குமோ அது நடக்கும்” என்று சொல்லிவிட்டுத்தான் சேலம் புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி.
எடப்பாடி சேலம் வந்ததும், ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றதையும், ஜெயக்குமாரின் காரைச் சுற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியதையும் டிவிகளில் பார்த்திருக்கிறார். இதுபற்றியும் தனது வருத்தத்தை நிர்வாகிகளிடம் பகிர்ந்திருக்கிறார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டுவருவதுதான் எடப்பாடியின் இப்போதைய உறுதியான நிலை என்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.
Post a Comment