உக்ரைன் நாட்டுக்கு மேலும் ஆயுத உதவிகளை வழங்கும் அமெரிக்கா
ரஷ்யா உக்ரைன் போர் நாளுக்கு நாள் கடுமையாகிக் கொண்டே வருகிறது. ரஷ்யா தற்போது டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே டான்பாஸ் பகுதியில் 80 சதவீதத்தை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மீதமுள்ள 20 சதவீதத்தை தக்கவைத்துக்கொள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்யாவை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் நடக்கும் பகுதிகளுக்கு சென்று, ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து, தொடர்ந்து உக்ரைன் நாட்டை பாதுகாத்து வருவதற்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பீரங்கி ஏவுகணைகளை அமெரிக்க அரசு வழங்கியது. இந்த ஏவுகணைகளை கொண்டு ரஷ்யப் படைகளை தாக்க மாட்டோம், அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டுக்கு மீண்டும் கூடுதல் ஆயுத உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக ரஷ்யா தற்போது தனது தாக்குதலை கடுமையாக்கி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் இந்த கூடுதல் ஆயுத உதவியை அறிவித்துள்ளார்.
கடற்படை கப்பல்களை தகர்க்கும் ராக்கெட்கள், ஹோவிட்சர் பீரங்கிகள், நவீன ராக்கெட் ஏவும் கட்டமைப்பு உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7812 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா, மேலும் 757 கோடி ரூபாய்க்கு உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Post a Comment