வைத்திலிங்கம் கூடாரத்தை வேட்டையாடிய எடப்பாடி
அதிமுகவில் கடந்த ஏழு நாட்களில் நடந்து வரும் சம்பவங்கள் அதிமுக நிர்வாகிகளிடையே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை அதிக பலம் மிக்கவராகவும், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை மிகக் குறைவான ஆதரவு பெற்றவராகவும் நிரூபித்து வருகின்றன.
ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை சர்ச்சை கடந்த ஜூன் 14 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்தில் வெடித்ததில் இருந்து... ஓ.பன்னீருடன் தீவிரமாக இருந்த ஒரே முக்கிய தலைமைக் கழக நிர்வாகி துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம்தான். பத்து முதல் பதினைந்து மாவட்டச் செயலாளர்கள்,மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் இருந்தாலும் பன்னீரின் பலமாக கருதப்பட்டவர் வைத்திலிங்கம்தான்.
இந்த நிலையில்தான் பன்னீரைச் சுற்றியிருக்கும் பலரையும் வேட்டையாடி தங்கள் பக்கம் இழுத்த எடப்பாடி தரப்பு அதிலும் குறிப்பாக வைத்திலிங்கத்தைக் குறிவைத்து வேட்டையாடி அவர் அருகே இருப்பவர்கள், அவரது ஆதரவாளர்களை எல்லாம் சரசரவென தங்கள் பக்கம் கொண்டுவந்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பலர் எடப்பாடி பக்கம் சென்றாலும் வைத்திலிங்கத்தை அதிர வைக்கும் வகையில் அவரது நிழலாக இருந்த காந்தி, முன்னாள் கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோரை அடுத்தடுத்து தூக்கியது எடப்பாடி டீம். இதில் தாமரை ராஜேந்திரனை விட, காந்தி அந்தப் பக்கம் சென்றதுதான் வைத்திலிங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது என்கிறார்கள்.
இதுபற்றி தஞ்சை முதல் பசுமை வழிச் சாலை வரை விசாரித்தோம். “ஒரு காலத்தில் வைத்திலிங்கத்தைச் சுற்றி இருபது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இல்லாமல் தஞ்சைக்குள் இறங்கமாட்டார். அவர் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கினால் அவரது ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் டிராபிக் ஜாம் செய்வார்கள். ஆனால் இனிமேல் அவர் தஞ்சாவூருக்கு எப்படி வருவார் என்று வைத்திலிங்கத்தின் ஒரு சில ஆதரவாளர்களே உச் கொட்டுகிறார்கள்.
ஓ.பன்னீரைச் சுற்றியிருந்த மாசெக்கள் பலரையும் தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தரப்பில் ஒன்றும் பெரிதாக சிரமப்படவில்லை. ஆனால் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற வலிமையான நிர்வாகியான வைத்திலிங்கம் பன்னீருடன் இருப்பது எடப்பாடிக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.
15 ஆம் தேதி இரவு பன்னீரை சந்தித்துவிட்டு வந்து செய்தியாளர்களைப் பார்த்த வைத்திலிங்கம், ‘ஒற்றைத் தலைமையா அதுக்கெல்லாம் கட்சியோட சட்டத்துல இடமே இல்ல. வாய்ப்பே இல்லை’ என்று ஆணித்தரமாக பேசினார். மேலும் வைத்திலிங்கத்துடன் இருக்கும் பெரம்பலூர் ராமச்சந்திரன் எடப்பாடியையும், எடப்பாடியைச் சுற்றியுள்ளவர்களையும் கடுமையாகத் தாக்கினார்.இந்த நிலையில்தான் எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பதைப் போல வைத்திலிங்கத்தின் தஞ்சாவூர் பலத்தை ஒடுக்குவது என்ற முடிவு செய்தார் எடப்பாடி.
இதுபற்றி ஏற்கனவே திருவாரூர் காமராஜ் பல முறை எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார், ஒரு காலத்தில் வைத்திலிங்கத்தின் தளபதிகளாக இருந்தவர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர். ஆனால் வைத்திலிங்கத்தின் அழுத்தம் காரணமாக மெல்ல மெல்ல அவரை விட்டு விலகினார்கள், அதுமட்டுமல்ல வைத்திலிங்கம் அதிமுக தலைமை பற்றி தஞ்சாவூரில் தன் முகாமில் வைக்கும் விமர்சனங்களை எடப்பாடியிடம் கொண்டு சேர்த்து மெல்ல மெல்ல இருவர் இடையிலும் தூரத்தை அதிகமாக்கினார்கள் காமராஜ் தரப்பினர்.
தஞ்சை மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு பெற்ற ம. சேகர் அமமுக பக்கம் போனவுடன் தனது ஆதரவாளரான காந்திக்கு பூஸ்ட் கொடுத்து உருவாக்கினார் வைத்திலிங்கம். அவருக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பதவி கொடுத்தார். பிறகு சமீபத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு கொடுத்தார். வைத்திலிங்கம்தான் காந்தி, காந்திதான் வைத்திலிங்கம் என்ற அளவுக்கு இருவரும் அவ்வளவு நெருக்கமானவர்கள்., அதுமட்டுமல்ல வைத்திலிங்கத்தின் தொழில்களையும் காந்தி கவனித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் வைத்திலிங்கத்துக்கும் வேலுமணிக்கும் ஓர் உரசல் ஏற்பட்டது. தஞ்சை மருத்துவக் கல்லூரி பகுதிச் செயலாளராக இருந்த சரவணன், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். உள்ளாட்சித் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தஞ்சை பிரச்சாரத்துக்கு வந்தார். அப்போது மேடையிலேயே சரவணன் எடப்பாடியின் காலில் விழுந்தார். இது வைத்திலிங்கத்தை கோபமாக்கியது. அதைவிட காலில் விழுந்துவிட்டு சென்ற சரவணனை, ‘சரவணா இங்க வா...’ என்று அழைத்த எடப்பாடி, ‘நீ வேட்பாளர் இல்லையா...நீ ஏன் மேடையில நிக்கல?’ என்று கேட்டார். அதற்கு சரவணன், ‘இல்லண்ணே... நான் நிக்கலை’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதைப் பார்த்து வைத்திலிங்கத்துக்கு மேலும் கோபமானது.சரவணன் வேலுமணியோடும், எடப்பாடியோடும் இவ்வளவு நெருக்கமாக இருப்பதை அறிந்திருந்த வைத்திலிங்கம் தஞ்சை மாநகரில் அவர் கேட்ட வார்டை கொடுக்கவில்லை. அதனால் அவரும் தேர்தலில் நிற்கவில்லை.
எனினும் பிரச்சாரத்தில் எடப்பாடியே சரவணனை கூப்பிட்டு விசாரித்ததை நேருக்கு நேராகப் பார்த்த வைத்திலிங்கம், தேர்தல் முடிந்த சில நாட்களில் எதிர்க்கட்சிக்கு வேலை செய்ததாக குற்றம் சாட்டி பகுதிச் செயலாளார் சரவணனை கட்சியில் இருந்து நீக்க பரிந்துரைத்தார்., ஆனால் இதை எடப்பாடி ஏற்க தாமதமாக்கினார். அப்போது எடப்பாடியின் பி.ஏ.வுக்கு போன் போட்ட வைத்திலிங்கம், ‘நான் சொல்ற ஆளை நீக்கலைன்னா என்னை நீக்கிப் பார்க்கச் சொல்லுங்க’ என்று சத்தம் போட்டார். அதன் பின்னே சரவணன் நீக்கப்பட்டார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் காமராஜ் மூலம் அந்த பகுதிச் செயலாளர் சரவணன் ஒருங்கிணைப்பில் வைத்திலிங்கம் கூடாரத்தை பிரிக்கும் வேலைகள் அன்றே தொடங்கிவிட்டன.
இந்தப் பின்னணியில் வைத்திலிங்கத்தின் நிழலாக கருதப்படும் காந்தியும் கூட எடப்பாடியின் கேமராவுக்குள் கொண்டுவரப்பட்டார். ஆனாலும் வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. ஆனால் 14 ஆம் தேதி மாசெக்கள் கூட்டத்திலும், மறுநாள் 15 ஆம் தேதி பிரஸ்மீட்டிலும் ஒற்றைத் தலைமைக்கு எதிராக வைத்திலிங்கம் வெளியிட்ட ஆணித்தரமான கருத்துகள் எடப்பாடி தரப்பை கோபப்படுத்தின. ஒருகட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதியே தன் பழைய பகையை மறந்து எடப்பாடியின் தூதுவராக வைத்திலிங்கத்திடம் பேசியிருக்கிறார். அவரை பழைய பாணியிலேயே டீல் செய்திருக்கிறார் வைத்திலிங்கம்.
அதன் பிறகுதான் தஞ்சாவூரில் ஏற்கனவே தொடர்பில் இருந்த வைத்திலிங்கத்தின் ஆதரவு நிர்வாகிகள் பலர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி பக்கம் போனபோதும் அதெல்லாம் பாத்துக்கலாம் என்றிருந்த வைத்திலிங்கத்துக்கு, 21 ஆம் தேதி தன் நிழலான காந்தியே எடப்பாடி வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜுடன் சென்று போஸ் கொடுத்த பிறகு அதிர்ச்சி தாங்கவில்லை. காந்தி மூலம் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மீதமிருக்கும் வைத்திலிங்கம் ஆதரவாளர்களையும் எடப்பாடி தரப்புக்கு கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறார் காமராஜ்” என்கிறார்கள்.
வைத்திலிங்கத்தின் கூடாரத்தை எடப்பாடி வேட்டையாடியது இப்படித்தான்.
Post a Comment