விகடன் மீது வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனத்தின் புகாரின்பேரில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில்... இந்த புகாரில் ஜூனியர் விகடன் ஆசிரியர் வெளியீட்டாளர் ஆகியோரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில்... திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் தமிழக அரசை விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு வெளியிட்டுள்ள செய்தியில்,
,"ஒரு தனியார் நிறுவனத்திடம் ஜூனியர் விகடன் இதழின் பெயரைப் பயன்படுத்தி, ஒரு தனி நபர் மிரட்டி பணம் கேட்டார் என்கிற புகாரின் பேரில் அந்த நபர் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஜூனியர் விகடன் இதழ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு தனியார் நிறுவனம் கொடுத்த வழக்கை பயன்படுத்தி ஜூனியர் விகடன் இதழ் குறிவைக்கப் படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
அதிகாலை கைது செய்வது, பத்திரிக்கை மேல் வழக்கு போன்ற காவல் துறை நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.
காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப்பட கூடாது என்றும், தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது" என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment