பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இன்று (மே 28) தேர்வு செய்யப்பட்டார்.
2024 மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பாமக தற்போது முதலே பணியாற்ற தொடங்கிவிட்டது.. 2026ல் அன்புமணி ராமதாஸை முதல்வராக்க வேண்டும் என்றும் அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை, திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸில் பாமகவின் பொதுக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சித் தலைவராக இருந்த ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, பாமகவின் தற்போதைய இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸை பாமகவின் தலைவராகத் தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை வாசித்த ஜி.கே.மணி, “தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பது பாமக. அனைத்து மக்களின் கட்சியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும் இருக்கிறது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான திட்டங்களை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும் இருக்கிறது.
பாமக இதுவரை சந்தித்த 9 மக்களவை தேர்தல்களில் 6 மக்களவை தேர்தலையும், 7 சட்டப்பேரவை தேர்தல்களில் 5 தேர்தல்களையும் எனது தலைமையில் எதிர்கொண்டது” என குறிப்பிட்டார்.
மேலும் அவர், கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை பாமக நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தேன். அதன்படி நடத்தப்பட்ட கலந்தாய்வின் அடிப்படையில், தற்போதைய இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்தான்தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்தனர் என்று கூறினார்.
அன்புமணி ராமதாஸை தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அரங்கில் இருந்த கட்சி நிர்வாகிகள் கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அதுபோன்று புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸுக்கு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜி.கே.மணி.
Post a Comment