சிறைச்சாலை
வெனிசுலா நாட்டின் ஸுலியா பகுதியில் அமைந்து உள்ள இந்த மரக்காய்போ தேசிய சிறைச்சாலை கடந்த 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முக்கிய குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டுமே இந்த சிறைச் சாலையில் அடைக்கப்படுவது வழக்கம். நாளடைவில் இந்த சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கவே, பிரச்சனையும் வர ஆரம்பித்தது. கைதிகளுக்குள் குழுக்கள் உருவாகின. இந்த குழுக்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதும் இதனால் மரணம் ஏற்படுவதும் ஒருகட்டத்தில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
பிரான்
இந்த சிறைச் சாலைக்கு செபனேடா சிறை என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இதனுள் இருக்கும் குழுக்களையும் சிறைவாசிகளையும் கட்டுப்படுத்தும் தலைவருக்கு பிரான் எனப் பெயரிட்டனர் சிறைவாசிகள். இந்த பதவிக்கு வரும் நோக்கில் சிறை வாசிகள் ஈடுபட்டதன் காரணமாகவும் மோதல்கள் எழுந்துள்ளன. உச்சகட்டமாக 1994 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, பெரும் கிளர்ச்சி ஒன்று நடந்தது.
சிறை குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் மரணமடைந்தனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 150க்கும் அதிகமான சிறைவாசிகள் மடிந்தனர். இந்த சம்பவத்தின்போது, சிறையில் உள்ள பல அறைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
மோசமான சிறை
கிளர்ச்சியை உருவாக்கும் கைதிகள் ஒருபுறம் என்றால், இந்த சிறையில் இருந்த சுகாதார குறைபாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 700 பேர் மட்டுமே தங்கும் இந்த சிறையில் ஒருகட்டத்தில் 3400 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சுகாதாரமில்லாத தண்ணீர், உணவு, கழிப்பிட வசதிகள் ஆகியவையும் போராட்டத்திற்கு சில நேரங்களில் காரணமாக அமைந்திருக்கின்றன.
எப்போதும் கூட்ட நெரிசலும், ஓயாத சண்டைகளுமாக இருந்த இந்த சிறையில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு கலவரங்களில் 69 பேர் உயிரிழந்தது உலகத்தையே உலுக்கியது. இந்த விஷயம் சர்வதேச நாடுகளால் கண்டிக்கப்பட்ட நிலையில், இந்த சிறையை மூடுவதாக அறிவித்தது வெனிசுலா.
வரலாற்றில் மிக மோசமான பக்கங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையை தற்போது அருங்காட்சியமாக மாற்ற இருப்பதாக அறிவித்திருக்கிறது வெனிசுலா நாடு. உலகின் மிக மோசமான சிறை என்று அழைக்கப்பட்ட இந்த மரக்காய்போ தேசிய சிறைச்சாலை அருங்காட்சியமாக மாற்றப்படுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Post a Comment